இஸ்ரேல் பிரதமர் (கோப்புப்படம்) 
உலகம்

போர்க் குற்றம்: இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தலைவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிப்பு

இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்டுக்கு எதிராகவும் கைது ஆணை பிறப்பிப்பு.

கிழக்கு நியூஸ்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 8, 2023 முதல் மே 20, 2024 வரை காஸாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதற்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களை மறுத்து இஸ்ரேல் தரப்பு வைத்த வாதங்களை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நிராகரித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் முஹமது தியாப் இப்ராஹிம் அல்-மஸாரிக்கு எதிராகவும் போர்க் குற்றத்துக்காகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என கரிம் கான் கடந்த மே 20 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்தாண்டு அக்டோபர் 7-ல் தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ 44,056 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 71 உயிரிழப்புகளும் அடக்கம். ஹமாஸ் கட்டுப்பாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி 1,04,268 பேர் காயமடைந்துள்ளார்கள்.