https://x.com/SONOFINDIA
உலகம்

அமெரிக்காவில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்ட விவகாரம்: தூதரகம் சொல்வது என்ன?

குடியேற்ற அதிகாரிகளிடம் அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதை விளக்க முடியாமல், குற்றவாளிகளைப் போல கட்டி வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்காவில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை முன்வைத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய அனுமதி இல்லை என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் வைத்து இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்படும் காணொளியை வெளிநாட்டு வாழ் இந்தியரான குனால் ஜெயின் தன் சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்தார். இந்திய மாணவரை அமெரிக்க அதிகாரிகள் ஒரு குற்றவாளியைப்போல நடத்தியதாக அந்த பதிவில் அவர் எழுதியிருந்தார்.

மேலும், `இந்தக் குழந்தைகள் விசா பெற்று காலையில் விமானத்தில் ஏறுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால், குடியேற்ற அதிகாரிகளிடம் அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதை விளக்க முடியாமல், குற்றவாளிகளைப் போல கட்டி வைக்கப்பட்டு மாலை விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இதுபோல 3-4 விவகாரங்கள் நடக்கின்றன. கடந்த சில நாட்களில் இதைப் போன்று பலமுறை நடந்துள்ளன’ என்றார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், `இந்திய மாணவர் ஒருவருக்கு நெவார்க் விமான நிலையத்தில் நேர்ந்த துன்பங்கள் குறித்த காணொளிகளை பார்த்தோம். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். எப்போதும் இந்தியர்களின் நலனைப் பேணும் கடமையில் தூதரகம் ஈடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், `சட்டப்பூர்வமான பயணிகளை எங்கள் நாட்டிற்கு தொடர்ந்து வரவேற்கிறோம். அதேநேரம், அமெரிக்காவிற்குள் நுழைய எந்த உரிமையும் கிடையாது. சட்டவிரோத நுழைவு, விசாக்களை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அமெரிக்க சட்டத்தை மீறும் செயலில் ஈடுபடுதல் போன்றவற்றை பொறுத்துக்கொள்ளமாட்டோம்’ என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.