ANI
உலகம்

வடகிழக்கு மாநிலங்கள் குறித்த முஹமது யூனுஸ் கருத்து: இந்தியத் தலைவர்கள் கண்டனம்!

புதுமையான, சவாலான பொறியியல் யோசனைகளுக்காக கோடிக்கணக்கில் செலவிடுவதற்குப் பதிலாக, வங்கதேசத்தை உடைத்து கடலுக்குச் செல்வதற்கான பாதையை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும், சீனாவையும் இணைத்து வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ் அரசு முறைப் பயணமாக அண்மையில் சீனாவிற்குச் சென்றார்.

சீன அரசு அதிகாரிகளுடன் அங்கு மேற்கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய யூனுஸ், நிலத்தால் சூழப்பட்டுள்ள (இந்தியாவின்) வடகிழக்குப் பிராந்தியத்திற்கான கடலின் ஒரே பாதுகாவலராகத் திகழும் வங்கதேசத்தின் நிலையைப் பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் சீனா வங்கதேசத்தில் பலமாகக் கால்பதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முஹமது யூனுஸின் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றியுள்ள அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, அவை ஆத்திரமூட்டுவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

`வடகிழக்கு மாநிலங்கள் கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசத்தை நிலைநிறுத்தும் செயல் கடுமையான கண்டத்திற்குரியது. அவரது இந்த கருத்து, இந்தியாவின் கோழியின் கழுத்து வழித்தடத்திற்கு (chicken neck corridor) இருக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

முஹமது யூனுஸின் அத்தகைய ஆத்திரமூட்டும் கருத்துகளை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் அவை நீண்டகால செயல்திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கின்றன’ என்றார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதான மாநிலக் கட்சியான திப்ரா மொத்தா கட்சித் தலைவர் பிரத்யுத் மாணிக்யா, `புதுமையான மற்றும் சவாலான பொறியியல் யோசனைகளுக்காக கோடிக்கணக்கில் செலவிடுவதற்குப் பதிலாக, வங்கதேசத்தை உடைத்து கடலுக்குச் செல்வதற்கான பாதையை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்’ என்றார்.