இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த பிரபல துறவி சின்மொய் கிருஷ்ண தாஸ் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்று அறியப்படும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர் பிரபல துறவி சின்மொய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ண தாஸ் சிட்டகாங் மாவட்டத்தில் அமைந்துள்ள புன்டரிக் தம் மடத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபரில் நடந்த ஒரு பேரணியின்போது வங்கதேசத்தின் தேசியக்கொடியை அவமதித்த காரணத்திற்காக அந்நாட்டு காவல்துறையால் தற்போது கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 18 நபர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சின்மொய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கும், அவருக்கு ஜாமின் வழங்காததற்கும் கவலை தெரிவித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து வங்கதேசத்தில் இருக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் கவலை தெரிவித்துள்ளது வெளியுறவு அமைச்சகம்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது வெளியுறவு அமைச்சகம். கிருஷ்ண தாஸ் விடுவிக்கப்படாவிட்டால் இந்தியா-வங்கதேசம் இடையே அமைந்துள்ள பெட்ராபோல் எல்லையை முற்றுயிடும் போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்கத்தில் உள்ள சில அமைப்புகள் அறிவித்துள்ளன.