மெக்ஸிகோவில் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளதால் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெக்ஸிகோவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் எல் மென்சோ. இவரது உண்மையான பெயர் நெமேசியோ ஒசெகுவேரா. முன்னாள் காவல்துறை அதிகாரியான எல் மென்சோ, ஜாலிஸ்கோ மாகாணத்தில் சிஜேஎன்ஜி என்ற போதைப்பொருள் கடத்தல் குழு மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் போதைப் பொருள்களை விற்று வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் பதியப்பட்ட நிலையில், இவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது.
ராணுவத்தின் ரகசியத் தாக்குதல்
இதற்கிடையில், நேற்று (பிப். 22) மெக்ஸிகோ நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு எல் மென்சோ மறைந்திருந்தது தெரிய வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் எல் மென்சோ பலத்த காயமடைந்தார். உடனே அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கூட்டிச்சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தாக மெக்ஸிகோ ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். முக்கிய உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலைகளில் வன்முறை
இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே, ஜாலிஸ்கா உள்ளிட்ட பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஆயுதம் ஏந்தியவர்கள், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களுக்குத் தீயிட்டுக் கொளுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கிருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்பகுதிகளில் அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏர் கனடா உள்ளிட்ட பல முன்னணி விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இதையடுத்து மெக்ஸிகோவில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளது. இது தொடர்பான பதிவில் கூறியிருப்பதாவது:-
“தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மறியல்கள் மற்றும் குற்றச் செயல்கள் காரணமாக, ஜாலிஸ்கோ, தமாலிபாஸ், மிச்சோகன், குயிரேரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்கள், மறுஅறிவிப்பு வரும் வரை இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடத்தைத் தேடி தங்கி, தேவையற்ற வெளிப்பயணங்களைக் குறைக்கவும். உடனுக்குடன் தகவல்களை அறிய உள்ளூர் ஊடகங்களைக் கவனிக்கவும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்; அவசர கால உதவிக்கு 911 என்ற எண்ணை அழைக்கவும். கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும். உங்கள் இருப்பிடம் மற்றும் நலம் குறித்த தகவல்களைத் தொலைபேசி, குறுஞ்செய்தி அல்லது சமூக ஊடகங்கள் வழியாக உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவ்வப்போது தெரியப்படுத்தவும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"Be aware of your surroundings": Indian embassy issues advisory to their citizens in Mexico after killing of El Mencho