கோப்புப்படம் 
உலகம்

கனடாவில் ஏற்பட்ட விபத்து: இந்தியாவைச் சேர்ந்த குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு!

கிழக்கு நியூஸ்

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மூன்று மாத பேரக் குழந்தை உள்பட நான்கு பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

மதுபானக் கடையில் கொள்ளை நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரை ஆண்டோரியோ காவல் துறையினர் காரில் துரத்தியபோது நேர்ந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் துரத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்கள்.

கனடாவின் ஆண்டோரியோவில் பாவ்மன் நகரிலுள்ள மதுபானக் கடையில் கொள்ளை நடந்ததாகப் புகார் வந்துள்ளது. இதையடுத்து, ஆண்டோரியோ காவல் துறையினர் அவரை விரட்டியுள்ளார்கள். கொள்ளையடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் கார்கோ வேனை எடுத்துக் கொண்டு வேகமாகத் தப்பித்துச் சென்றுள்ளார். இவர் நெடுஞ்சாலை 401-ல் சாலையின் எதிர்புறத்தில் வாகனத்தை இயக்கியுள்ளார். எனினும், காவல் துறையினரும் இவரை சாலையின் எதிர்திசையில் விரட்டியுள்ளார்கள். இதில் ஒருகட்டத்தில் அவருடைய கார்கோ வேன் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

டொரண்டோவிலிருந்து 50 கி.மீ. கிழக்குத் திசையில் நேர்ந்த இந்த விபத்தில் காரில் பயணித்த கணவன், மனைவி மற்றும் மூன்று மாத பேரக் குழந்தை உயிரிழந்தார்கள். மூன்று மாத குழந்தையின் 33 வயதுடைய தந்தை மற்றும் 27 வயதுடைய தாய் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆண்டோரியோ சிறப்பு விசாரணைப் பிரிவு இந்தத் தகவலைப் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது.

எனினும், விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் மணிவண்ணன் மற்றும் மஹாலட்சுமி என்பதும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் பேரக் குழந்தையைப் பார்ப்பதற்காகக் கனடா சென்றபோது இந்த விபத்து நேரிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.