கோப்புப்படம் ANI
உலகம்

ஐ.நா. முழு நேர உறுப்பினர்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

கிழக்கு நியூஸ்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்குவதற்கான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்பட 143 நாடுகள் வாக்களித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனம் கடந்த 2012 முதல் உறுப்பினர் அல்லாத வெறும் பார்வையாளர் என்கிற அந்தஸ்தில் உள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் முழு நேர உறுப்பினர் ஆவதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் தேவை.

பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக அனுமதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஏப்ரல் 18-ல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை முறியடித்தது.

இதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினர் நாடாகச் சேர்ப்பது குறித்து அரபு நாடுகள் கூட்டமைப்பால் ஐ.நா. பொதுச்சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்புடைய, சிறப்பு அவசரக் கூட்டம் நேற்று காலை கூடியது. 190 நாடுகள் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராகச் சேர்க்க இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்ப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.