ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் https://www.newsonair.gov.in/
உலகம்

தாலிபான் அரசுக்கு எதிராக ஐநா சபையில் வாக்கெடுப்பு: இந்தியா புறக்கணிப்பு | Taliban | Afghanistan

நீண்டகால கூட்டாளி என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதை உறுதி செய்வதில் இந்தியாவிற்கு நேரடி பங்கு உள்ளது.

ராம் அப்பண்ணசாமி

தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் (UNGA) நடைபெற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், சர்வதேச சட்டதிட்டங்களைக் கடைபிடிக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவும், ஆப்கானிஸ்தான் அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

அத்துடன், `இனி பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்துவதைத் தடுப்பதை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களும், தனிநபர்களும் உறுதி செய்யவேண்டும்’ என்று தன் உரையில் அவர் அடிக்கோடிட்டார்.

மேலும், புதிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட முயற்சிகள் இல்லாமல் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகள், எதிர்பார்க்கும் விளைவுகளை ஆப்கானிய மக்களுக்கு வழங்க வாய்ப்பில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

அண்மையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் உரையாடினார். கடந்த 22 ஏப்ரல் 2025-ல் பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்ததை ஜெய்சங்கர் வரவேற்றார்.

மேலும் அப்போது, `நீண்டகால கூட்டாளி என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதை உறுதி செய்வதில் இந்தியாவிற்கு நேரடி பங்கு உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.