PRINT-112
உலகம்

ஓராண்டை நிறைவு செய்த ஹமாஸ் தாக்குதல்: மத்திய கிழக்கின் நிலவரம் என்ன?

ராம் அப்பண்ணசாமி

கடந்த வருடம் அக்.7-ல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணை ஏவி தாக்குதல் நிகழ்த்தியது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் தரைவழியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பொதுமக்கள் உயிரிழந்தனர், மேலும் 250 இஸ்ரேலியர்கள் பிணையக் கைதிகளாக காஸா பகுதிக்குள் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதனை அடுத்து ஹமாஸ் மீது போர் தொடுத்தார் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹூ. கடந்த ஒராண்டாக காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடைபெற்றுவரும் இந்தப் போரில் சுமார் 42,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளைக் குறிவைத்து போரிட்டு வருகிறது இஸ்ரேல்.

நேற்று (அக்.06) மாலை இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது `ஃபதி’ ரக ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள். இதில் பல கட்டடங்கள் சேதமடைந்து, 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மறுமுனையில் நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உளவுத்துறைத் தலைமையகமும், ஆயுதக் கிடங்கும் குறிவைக்கப்பட்டன. மேலும் தெற்கு லெபனானிலும், பெக்கா பள்ளத்தாக்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

ஹமாஸுக்கு ஆதரவாக கடந்த ஓராண்டாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திவரும் வேளையில், கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தொடர்ச்சியாக கடந்த வாரம் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது ஈரான். இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கலாண்ட், `ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து இஸ்ரேல் முடிவெடுக்கும்’ என்றார்.