உலகம்

நான் அரசாங்கத்திற்காக வேலை பார்க்கவில்லை: அமெரிக்காவில் சசி தரூர் விளக்கம்!

இந்தியா கடுமையாகவும், புத்திசாலித்தனமான முறையிலும் தாக்குதல் நடத்தியது.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலின்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், `(மத்திய) ​​அரசாங்கத்திற்காக தாம் வேலை செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பனாமா, கயானா, பிரேசிஸ், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசி தரூர், `நான் அரசாங்கத்திற்காக வேலை பார்க்கவில்லை, அது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு எதிர்க்கட்சிக்காக வேலை பார்க்கிறேன். கடுமையாகத் தாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது அதேநேரம் புத்திசாலித்தனமாக தாக்கவேண்டும் என்று நானே ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளேன். இந்தியா அதைத்தான் செய்தது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

அத்துடன், பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளில் `ஒரு புதிய அடித்தளத்தை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றும் தரூர் கூறினார். `நாங்கள் அனைத்து வழிகளிலும் முயற்சித்தோம் – சர்வதேச அளவிலான ஆவணங்கள், புகார்கள், என அனைத்தும் முயற்சிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார்.

மேலும் இந்த உரையாடலின்போது, `நாங்கள் போரில் ஆர்வம் காட்டவில்லை, எங்கள் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவே விரும்புகிறோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.

சசி தரூர் தலைமையிலான குழுவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, புபனேஸ்வர் கலிட்டா, ஷஷாங் மணி திரிபாதி, லோக் ஜன சக்தியின் (ராம் விலாஸ்) சாம்பவி சௌத்ரி, தெலுங்கு தேசத்தின் ஹரிஷ் பாலயோகி, சிவசேனாவின் மிலித் தியோரா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சர்ஃபராஸ் அஹமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.