உலகம்

ஃபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை!

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது தேசிய பேரணி தலைமையிலான வலதுசாரிகள் கூட்டணி

ராம் அப்பண்ணசாமி

577 இடங்களைக் கொண்ட ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் இடதுசாரிகள் கூட்டணிக்கு 187 இடங்களும், ஃபிரான்ஸ் அதிபர் மாக்ரோனின் மையவாத கூட்டணிக்கு 159 இடங்களும், வலதுசாரிகள் கூட்டணிக்கு 142 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 289 இடங்கள் தேவைப்படும் நிலையில் எந்த கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

முதல் கட்டத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி தலைமையிலான வலதுசாரிகள் கூட்டணி முன்னணி வகித்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது வலதுசாரிகள் கூட்டணி. இந்த முடிவுகளால் ஃபிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

இதனால் சில மிதவாத இடது மற்றும் வலதுசாரிக் கட்சிகளுடன் தன் மையவாத கூட்டணியை இணைத்து ஒரு புதிய அரசை அமைக்க அதிபர் மாக்ரோன் முயற்சி செய்யலாம், அல்லது நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் பெற்ற இடதுசாரிகள் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். தற்போதைய நிலவரப்படி தன் கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலை, பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்று மாக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 31 சதவீத வாக்குகள் தேசிய பேரணி கட்சி தலைமையிலான வலதுசாரிகள் கூட்டணிக்குக் கிடைத்ததால் ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்.