உலகம்

இலங்கை பிரதமரானார் ஹரிணி அமரசூரிய!

தமிழர்களான சரோஜா சாவித்ரி பால்ராஜ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும், ராமலிங்கம் சந்திரசேகர் மீன்வள அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ராம் அப்பண்ணசாமி

இலங்கையின் புதிய பிரதமராக இன்று (நவ.18) பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய.

225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த நவ.14-ல் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 159 இடங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் பணியில் இறங்கியது தேசிய மக்கள் சக்தி கூட்டணி.

இந்நிலையில் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஹரிணி அமரசூரியவுக்கு அதிபர் அநுர குமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழர்களான சரோஜா சாவித்ரி பால்ராஜ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும், ராமலிங்கம் சந்திரசேகர் மீன்வள அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கடந்த செப்.22-ல் இலங்கையின் அதிபராக முதல்முறையாகப் பொறுப்பேற்றார் அநுர குமார திசாநாயக்க. அப்போது பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஹரிணி அமரசூரியவை பிரதமராக நியமித்தார் அதிபர் திசாநாயக்க.

இதனால் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு இலங்கையின் 3-வது பெண் பிரதமரானார் ஹரிணி அமரசூரியா. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் ஹரிணி அமரசூரிய. இவருடன் 20 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்றுள்ளனர்.