ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளில் 50,000-க்கும் மேலான படை வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய கூட்டு ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தைக் கடந்து தொடர்கிறது. இதனால் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணையையும் முடக்கியுள்ளதால் உலகில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அனைத்து விதமான தாக்குதல்களும் ஏவுகணைகள், டிரோன்கள் என வான்வழித் தாக்குதல்களாகவே நடைபெறுகின்றன.
படைகளை அதிகரிக்கும் அமெரிக்கா
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் அமெரிக்கா இதுவரை 57,000 படையினரைக் குவித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் கடந்த வாரம் மட்டும் 2,500 கடற்படையினர் உட்பட 5,000 அமெரிக்க படையினர் புதிதாக வந்துள்ளனர். இதனால் பகுதியில் உள்ள மொத்த படை எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. மேலும், 10,000 தரைப்படையினரை அனுப்பவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இயல்பாக மேற்கு ஆசியாவில் சுமார் 40,000 அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இப்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தரைவழி படையெடுப்பு சாத்தியம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த நடவடிக்கையைப் பரிசீலித்து வரும் நிலையில், தரைவழி தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. கார்க் தீவு மற்றும் அதன் எண்ணெய் கிடங்குகளைப் பாதுகாக்கவோ, ஈரான் வசம் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றவோ அல்லது ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாட்டை உடைக்கவோ இந்தப் படைகள் பயன்படுத்தப்படலாம் என்று உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் படை குவிப்பு ஜனவரி 2026 முதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் முந்தைய 'என்றும் முடியாத போர்கள்' (forever wars) போன்று மாறிவிடும் அபாயம் உள்ளதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
முக்கிய படை நகர்வுகள்
யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பல்: 3,500க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினருடன் கடந்த 28 அன்று வளைகுடா நாடுகளின் கடற்பகுதிக்கு வந்துள்ளது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து 2000 பாரா ட்ரூப்பர்கள் மேற்கு ஆசியாவுக்கு அனுப்பபட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதேபோல் 2,500 கடற்படை வீரர்களையும் மாலுமிகளையும் கொண்ட யுஎஸ்எஸ் பாக்ஸர் போர் கப்பலும் கலிபோர்னியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் படைகள் ஈரானின் கார்க் தீவுக்கு அருகில் 'தாக்கும் தூரத்தில்' நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கப் போர் தளங்கள்
அமெரிக்கா ஏற்கனவே கத்தாரின் அல் உதைத், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட இடங்களில் பெரிய விமான மற்றும் கடற்படைத் தளங்களைப் பராமரித்து வருகிறது. இவற்றில் தற்போது புதிதாகக் களமிறக்கப்பட்டுள்ள படைகளும் சேரும் நிலையில், இந்தப் படை அதிகரிப்பு ஆப்கானிஸ்தான் போரின் தொடக்கத்தை நினைவூட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அங்கு ஆரம்பத்தில் 3,000 படையினருடன் தொடங்கியது, பின்னர் 1 லட்சத்தைத் தாண்டியது. ஈரான் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பெர்சியன் வளைகுடாவில் கன்னி வெடிகள் வைக்கும் அச்சுறுத்தல்களை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்க படையினருக்கு பெரிய இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Boots on the ground. The arrival of nearly 5,000 United States troops, including 2,500 Marines, in West Asia last week taking the number in the region to more than 50,000, an unmistakable signal the United States.