உலகம்

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் மாக்ரோன்!

ராம் அப்பண்ணசாமி

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைக்கப் போவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன். ஜூன் 30-ல் முதல் கட்டம், ஜூலை 7-ல் இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவிப்பு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஃபிரான்ஸ் நாட்டின் `தேசிய பேரணி’ தலைமையிலான வலதுசாரிக் கட்சிகளுக்கு 34% வாக்குகள் கிடைத்துள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் மாக்ரோனின் `மறுமலர்ச்சி கட்சிக்கு’ 15% வாக்குகள் கிடைத்துள்ளன.

வலதுசாரி கட்சிகளின் இந்த எழுச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள மாக்ரோன், `வலதுசாரிக் கட்சிகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் வளர்ச்சி பெற்று வருகின்றன. ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனவே முடிவை நான் உங்களிடம் (மக்கள்) விடுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

`ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சியால், ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்படும் அபாயம் உள்ளது’ என கடந்த ஜூன் 6-ல் கருத்து தெரிவித்திருந்தார் மாக்ரோன்.

2022-ல் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு நடந்த தேர்தலில், மாக்ரோனின் `மறுமலர்ச்சி கட்சிக்கு’ அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. `தேசிய பேரணி கட்சி’ தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளன. ஆனால் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படுவதால் அவரது பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.