பிரான்ஸ் நாட்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கேப்ரியல் அட்டால். அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பிரதமர் அட்டாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் வரை கேப்ரியல் அட்டாலை காபந்து பிரதமராகத் தொடர பணித்துள்ளார் அதிபர் மாக்ரோன்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் அடுத்த வாரம் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் கேப்ரியல் அட்டாலின் ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.
நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாமன்றத்தின் கீழ் அவைக்கான தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணிக்கு 187 இடங்களும், மையவாத கூட்டணிக்கு 159 இடங்களும், வலதுசாரிகள் கூட்டணிக்கு 142 இடங்களும் கிடைத்தன. பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் 577 இடங்கள் உள்ளன. இதனால் பிரான்ஸ் நாட்டில் ஆட்சி அமைக்க 289 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்த கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவியை முன்வைத்து இடதுசாரிகள் கூட்டணிக்குள் குழப்பம் நடந்து வரும் காரணத்தால் இன்னும் பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்கவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூலை 17) பிரான்ஸ் நாடாமன்றத்தின் கீழ் அவையின் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால் புதிய சபாநாயகராக இடதுசாரிகள் சார்பு வேட்பாளர் தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.