பதவியில் இருந்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று (ஆக. 22) கொழும்புவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
76 வயதான விக்ரமசிங்கே, குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) தலைமை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார். அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 செப்டம்பரில் தனது மனைவியான பேராசிரியர் மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து செல்ல, அரசு நிதியை தவறான முறையில் விக்ரமசிங்கே பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த சமயம் அதிகாரப்பூர்வ அலுவல்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து விக்ரமசிங்கே திரும்பி வந்ததாகவும், அதன்பிறகு தனது மனைவியின் தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள அரசு செலவில் அவர் இங்கிலாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக விக்ரமசிங்கேவின் பயணச் செலவுகள் குறித்து அவரது ஊழியர்களிடம் சிஐடி அதிகாரிகள் விசாரித்தனர்.
கோத்தபய ராஜபக்ஷேவுக்குப் பதிலாக அதிபராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, 2024-ம் ஆண்டின் இறுதி வரை பதவியில் இருந்தார். 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அவரது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன.
ஜூலை 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபர் பொறுப்பில் இருந்த விக்ரமசிங்கே, முன்னதாக இலங்கையின் பிரதமராக ஆறு முறை பணியாற்றியுள்ளார்.