படம் - x.com/ICC 
உலகம்

போதைப் பொருள் விற்பனையில் ஸ்டூவர்ட் மெக்கிலுக்குத் தொடர்பா?: நீதிமன்றம் தீர்ப்பு

கோகைன் போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில்...

கிழக்கு நியூஸ்

கோகைன் போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் வழக்கில் சிட்னி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

54 வயது ஸ்டூவர்ட் மெக்கில், ஆஸ்திரேலிய அணிக்காக 10 வருடங்கள் விளையாடி 44 டெஸ்டுகளிலும் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றார். ஷேன் வார்ன் விளையாடிய காலகட்டத்தில் ஆஸி. அணியில் இடம்பிடித்ததால் போதிய வாய்ப்புகளை இவரால் பெறமுடியாமல் போனது.

ஏப்ரல் 2021-ல் ஸ்டூவர்ட் மெக்கில், மர்மநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தல் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். நீண்டப் போராட்டத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆறு பேரைக் காவல்துறை கைது செய்தது. போதைப் பொருள் விற்பனை தொடர்பான மோதலில் இச்சம்பவம் நடைபெற்றதாகப் பிறகு அறியப்பட்டது. இதையடுத்து, ஒரு பெரிய வணிக போதைப்பொருள் விநியோகத்துக்குத் துணைபோனதாக மெக்கில் கைது செய்யப்பட்டார்.

மெக்கிலின் போதைப் பொருள் வணிகருக்கும் மெக்கில் சகோதரர் மரினோவுக்கும் இடையிலான வியாபார ஒப்பந்தத்தில் ஒரு கிலோ கோகைன் போதைப் பொருள் 3 லட்சத்து 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலருக்குச் சட்டவிரோதமாக (ஏறத்தாழ ரூ. 1.81 கோடி) கைமாறியது. இந்த ஒப்பந்தம் மெக்கில்லின் உணவகத்தில் நடைபெற்றது. இதையடுத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளின் மிகப்பெரிய வணிகத்தில் பங்கேற்றதாக மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைதானார். பிறகு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெரிய அளவிலான போதைப் பொருள் வணிகத்தில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஸ்டூவர்ட் மெக்கிலை சிட்னி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சிட்னியின் வடக்குக் கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாகச் சந்திப்பு நடைபெற்றாலும் வணிக ஒப்பந்தம் நடக்கவிருந்ததை தான் அறியவில்லை என நீதிமன்றத்தில் மறுத்தார் மெக்கில். அந்த வியாபாரியிடமிருந்து அவ்வப்போது போதைப் பொருள்களை வாங்கும் பழக்கம் இருந்தாலும் இந்த கோகைன் வியாபாரத்தில் தனக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அடியோடு மறுத்தார். எனினும் மெக்கில்லுக்குத் தெரியாமல் இந்த ஒப்பந்தம் நடந்திருக்க முடியாது என்று அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள்.

ஒரு கிலோ கோகைன் ஒப்பந்தம் குறித்து மெக்கில்லுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் போதைப்பொருள் வியாபாரத்துக்கு உதவி புரிந்ததாக மெக்கில்லை குற்றவாளி எனத் தீர்ப்பெழுதியுள்ளது நீதிமன்றம். இதனால் பெரிய அளவிலான குற்றத்திலிருந்து மெக்கில் விடுவிக்கப்பட்டாலும் சிறிய அளவில் சட்டவிரோத செயலுக்குத் துணை போனதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மெக்கில்லின் தண்டனை குறித்த விசாரணை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.