கலீதா ஜியா (கோப்புப்படம்) 
உலகம்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: தலைவர்கள் இரங்கல் | Khaleda Zia |

நீண்டநாள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா காலமானார். அவரது வயது 80...

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா, உடல்நலக் குறைவால் இன்று காலை 6 மணி அளவில் காலமானதாக வங்கதேச தேசியவாதக் கட்சி அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

யார் இந்த கலீதா ஜியா?

1945-ல் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் பிறந்த கலீதா ஜியா, இந்தியப் பிரிவினையின் போது குடும்பத்தினருடன் வங்கதேசத்துக்குக் குடிபெயர்ந்தார். தனது 15-வது வயதில் ராணுவ வீரரான ஜியாவுர் ரஹ்மான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர் வங்கதேசத்தின் அதிபராக 1977 முதல் 1981 வரை பதவி வகித்தார். அதன்பின் 1981-ல் ஜியாவுர் ரஹ்மான் ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டார். கணவரின் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்தார் கலீதா ஜியா.

முதல் பெண் பிரதமர்

வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவரான கலீதா ஜியா, 1991-ல் தொடங்கி, மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு ஒரு முஸ்லீம் நாட்டை வழிநடத்திய இண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் கலீதா பெற்றுள்ளார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் கலீதா ஜியா பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பாதிக்கப்பட்ட உடல்நலம்

2018-ல் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நீரிழிவு, இதயம், நுரையீரல் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான அரசு அமைந்த பின் சிறையில் இருந்து விடுக்கப்பட்டார். இருப்பினும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

நீண்டநாள் உடல் நலக்குறைவு

கலீதா ஜியா, நீண்டநாள் உடல்குறைவால் பாதிக்கப்பட்டு அடிக்கடி லண்டனுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் கடந்த நவம்பர் 23 அன்று அவரது உடல்நிலை மோசமானதால் தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். அங்கு நீண்ட நாள்கள் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். இதனால் அவரது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.

மருத்துவமனையில் மரணம்

இந்நிலையில், நேற்று (டிச. 29) இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அதிநவீன சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்ல கத்தாரில் இருந்து ஒரு சிறப்பு விமானம் தயார் செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எவர்கேர் மருத்துவமனையில் இருந்து டாக்கா விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு மருத்துவ வாரியம் அனுமதி மறுத்தது. இதனால் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Khaleda Zia, Bangladesh’s first female prime minister and one of its most formidable political figures, died on Tuesday, December 30, 2025, after days of battling an illness. She was 80.