அமெரிக்க முன்னாள் அதிபரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜிம்மி கார்டர் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த 1924-ல் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பிறந்த ஜிம்மி கார்டர், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகு ஏறத்தாழ 8 ஆண்டுகள் அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார். கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் குடும்பத் தொழிலான விவசாயத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டார்.
குடியியல் உரிமைகள் இயக்கத்தின் (civil rights movement) தீவிர ஆதரவாளரான கார்டர், ஒரு கட்டத்தில் ஜனநாயகக் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். 1963 முதல் 1967 வரை ஜார்ஜியாவைச் சேர்ந்த செனட் சபையின் உறுப்பினராகவும், அதைத் தொடர்ந்து 1971 முதல் 1975 வரை ஜார்ஜியா மாகாணத்தின் 76-வது ஆளுநராகவும் பணியாற்றினார் கார்டர்.
ஜார்ஜியா மாகாணத்தைத் தாண்டி வெளியே அதிகம் அறிந்திடப்படாத கார்டர், 1976 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றைய அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ஜெரால்ட் ஃபோர்டை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, 39-வது அமெரிக்க அதிபராக 1977-ல் பொறுப்பேற்றார் கார்டர்.
எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவுகளை ஏற்படுத்தும் வகையில், கடந்த 1978-ல் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முக்கியப் பங்காற்றினார் கார்டர். 1980-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் நடிகரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரோனால்ட் ரீகனிடம் அவர் தோல்வியடைந்தார்.
அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் அது தொடர்பான விஷயங்களை முன்னெடுக்கவும், தன் மனைவி ரோஸ்லினுடன் இணைந்து 1982-ல் கார்டர் மையத்தை (carter center) நிறுவினார் ஜிம்மி கார்டர். இந்த அமைப்பு முன்னெடுத்த பணிகளுக்காக கடந்த 2002-ல் ஜிம்மி கார்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 1-ல் ஜிம்மி கார்டரின் 100-வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். இந்நிலையில், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நேற்று (டிச.29) அவர் காலமானார்.
கார்டரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.