உலகம்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 90 ஆயிரம் இந்தியர்கள்!

ஒவ்வொரு மணி நேரமும் 10 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்து கைதாகியிருக்கிறார்கள்.

கிழக்கு நியூஸ்

கடந்தாண்டு அக்டோர் முதல் கடந்த செப்டம்பர் வரை 90,415 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளார்கள்.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறை இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 1 முதல் நடப்பாண்டு செப்டம்பர் 30 வரை (அமெரிக்க நிதியாண்டு 2024) தரவுகள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 29 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் இந்தியர்கள் மட்டும் 90,415 பேர். அதாவது ஒவ்வொரு மணி நேரமும் 10 இந்தியர்கள் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் முந்தைய நிதியாண்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சித்த இந்தியர்களைக் காட்டிலும் இது குறைவு. முந்தைய நிதியாண்டில் 32 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சித்திருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டும் 96,917 பேர்.

அமெரிக்காவின் நடப்பு நிதியாண்டில் சட்டவிரோதமாக மெக்ஸிகோ எல்லை மூலம் நுழைய முயன்றவர்களைக் காட்டிலும் கனடா எல்லை மூலம் நுழைய முயன்றவர்களே அதிகம். மெக்ஸிகோ எல்லை வழியாக 25,616 பேர் நுழைய முயன்று கைதாகியுள்ளார்கள். கனடா எல்லை வழியாக 43,764 பேர் நுழைய முயன்று கைதாகியுள்ளார்கள்.

நடப்பு நிதியாண்டில் கைதான 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களில் 78,312 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.