ANI
உலகம்

20 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்: ஷேக் ஷசீனா உருக்கம்

என் நாடு, என் வீடு என எதுவுமே இல்லாமல் நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன்.

ராம் அப்பண்ணசாமி

பிரதமராக இருந்தபோது வெறும் 20-25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பித்ததாகக் குரல் பதிவின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.

அரசுப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, பழைய இட ஒதுக்கீடு நடைமுறைக்குத் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அன்றைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 5-ல் அந்நாட்டுத் தலைநகர் டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஷேக் ஹசீனா. அதன்பிறகு, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இருமுறை பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த மாணவர் போராட்டத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச அவாமி லீக் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேற்று (ஜன.17) இரவு, வெளியிடப்பட்ட ஷேக் ஹசீனாவின் குரல்பதிவில் அவர் கூறியதாவது,

`நானும், எனது சகோதரி ரெஹானாவும் உயிர் பிழைத்தோம். வெறும் 20-25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்பினோம். ஆகஸ்ட் 21-ம் தேதி (2004) நடந்த கொலை முயற்சியில் இருந்தும், கோடாலிபாராவில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்தும் தப்பித்திருக்கிறேன்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த சதியிலிருந்தும் (நான்) தப்பிக்க அல்லா விருப்பப்பட்டுள்ளார். இல்லையென்றால், என்னால் உயிர் பிழைத்திருக்க முடியாது. என் நாடு, என் வீடு என எதுவுமே இல்லாமல் நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். அனைத்தும் எரிந்துவிட்டன’ என்றார்.