பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் REUTERS
உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு! | Palestine | France

மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் பெரும்பாலும் போராட்டங்கள் அல்லது பிற வகையிலான பதற்றங்களாக பிரான்சில் எதிரொலிக்கின்றன.

ராம் அப்பண்ணசாமி

இஸ்ரேலுடனான போரில் சிக்கியுள்ள பாலஸ்தீனத்தின் காஸாவில், பட்டினியால் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழக்கும் விவகாரம் உலகளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அறிவித்துள்ளார்.

வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் இந்த முடிவு முறைப்படுத்தப்படும் என்று தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ள மாக்ரோன், `காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு பொதுமக்கள் காப்பாற்றப்படுவதே, இன்றைக்கு அவசர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்’ என்றார்.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு, அதிபர் மாக்ரோன் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கினார், யூத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் அவ்வப்போது பேசிவந்தார். ஆனால் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் குறித்து, அண்மைக் காலமாக அவர் பெரும் விரக்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவிலான இஸ்லாமிய மக்கள்தொகையை பிரான்ஸ் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் பெரும்பாலும் போராட்டங்கள் அல்லது பிற வகையிலான பதற்றங்களாக பிரான்சில் எதிரொலிக்கின்றன.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவுள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ் ஆகும். ஐரோப்பாவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்பட உலகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன. அதேநேரம் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அதிகாரபூர்வமாக பாலஸ்தீனம் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்படும்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் ஐ.நா.வில் `இரு நாடுகள் தீர்வு (இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்)’ குறித்த ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

கடந்த மாதம், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான தனது உறுதியை மாக்ரோன் வெளிப்படுத்தினார். மேலும் இதன் மூலம், இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் அதன் உரிமைக்கும் இணையாக, இரு நாடுகள் தீர்வுக்கான ஒரு பரந்துபட்ட இயக்கத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.