உலகம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸுக்குக் குவியும் தேர்தல் நிதி

ஏற்கனவே பைடனுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடையான சுமார் 95 மில்லியன் அமெரிக்க டாலர்களும் கமலா ஹாரீஸுக்குக் கிடைக்கும்

ராம் அப்பண்ணசாமி

அடுத்த ஆண்டு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக முன்பு அறிவித்தார் தற்போதைய அதிபர் ஜோ பைடன்.

இந்நிலையில் கடந்த ஜூலை 13-ல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போது குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை சுட்டுக்கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இதில் உயிர் தப்பினார் டிரம்ப்.

இதைத் தொடர்ந்து இந்த வருடம் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன். மேலும் இந்த அறிவிப்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸை, நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தாம் முன்மொழிவதாகவும், அவருக்குத் தன் முழு ஆதரவை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பைடனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்த கமலா ஹாரீஸ், ஜனநாயக் கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் தன் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பில் உள்ளதாக அறிவித்தார்.

பைடன் கமலா ஹாரீஸை முன்மொழிந்த 7 மணி நேரத்தில் ஏறத்தாழ 46 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்குத் தேர்தல் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

ஒரு வேளை ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்தபோது ஏற்கனவே பைடனுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடையான சுமார் 95 மில்லியன் அமெரிக்க டாலர்களும் கமலா ஹாரீஸுக்குக் கிடைக்கும்.