துபாய் சர்வதேச விமான நிலையம் (கோப்புப்படம்) 
உலகம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம் | Dubai International Airport |

விமான நிலையத்தில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது...

கிழக்கு நியூஸ்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக துபாய் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. பல நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் துபாய் வழியாகவே செல்கின்றன. கடந்த மூன்று வாரங்களாக இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. குறிப்பாக ஈரான் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

விழுந்து வெடித்த டிரோன்கள்

கடந்த மார்ச் 11 அன்று இதேபோல் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இரண்டு தற்கொலைப்படை டிரோன்கள் வெடித்துக் கீழே விழுந்தன. பெரும் சத்தத்துடன் டிரோன்கள் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதில், இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் விமானப் போக்குவரத்து இயல்பாகத் தொடர்ந்தது. அப்போது ஐக்கிய அரபு அமீரத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், ஈரானின் ஏவுகணைகள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதாகக் கூறியது.

மீண்டும் டிரோன் தாக்குதல்

இந்நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணி அளவில் ஈரானின் டிரோன் தாக்குதல் ஒன்று நடந்ததாக துபாய் ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

யாருக்கும் காயம் இல்லை

”துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வர துபாய் பாதுகாப்புப் படைகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விமான சேவைகள் ரத்து

இதனால் எமிரேட்ஸ், பிளை துபாய் போன்ற விமானங்கள் தங்கள் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. இதனால் ஈரானிலிருந்து இந்தியா திரும்பிக் கொண்டிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் 80 பேர், துபாய் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், துபாய் விமான நிலையத்தில் நடந்த டிரோன் தாக்குதல் காரணமாக தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் பயணச்சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வருங்காலத்தில் வேறு ஒரு நாளில் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் தேர்வுகளை ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

With the Dubai International Airport, the world's busiest international airport temporarily suspending all flight operations due to a drone attack by Iran, flight operations scheduled from there have all stopped.