அமெரிக்காவின் 47-வது அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஆதரவாளர்கள் முன்னிலையில் இன்று உரையாற்றினார். அப்போது எலான் மஸ்க் பெயரை ஆதரவாளர்கள் முழக்கமிட, அவரைப் பற்றியும் டிரம்ப் பேசினார்.
"எலான் மஸ்க் ஓர் அற்புதமான மேதை. நம் மேதைகளை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மிடம் நிறைய மேதைகள் இல்லை. அவர் ஓர் அற்புதமான மனிதர். பிரசாரத்துக்காக ஃபிலடெல்ஃபியா மற்றும் பென்சில்வேனியாவில் பல இடங்களில் இரு வாரங்கள் செலவிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்பு அவர் ராக்கெட் ஒன்றை ஏவினார். மேலே சென்ற ராக்கெட், கீழே வருவதை என்னால் பார்க்க முடிந்தது. எலான் மஸ்கால் இதைச் செய்ய முடியும் என நினைத்தேன். எலான் மஸ்கால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதைப் பார்க்க அழகாக இருந்தது.
எலான் மஸ்கை அழைத்தேன். இதை வேறு யாரால் செய்ய முடியும் என அவரிடம் கேட்டேன். ரஷியாவால் இதைச் செய்ய முடியுமா? முடியாது. சீனாவால் செய்ய முடியுமா? முடியாது. அமெரிக்காவில் உன்னைத் (எலான் மஸ்க்) தவிர்த்து வேறு யாரால் இதைச் செய்ய முடியும்? யாராலும் செய்ய முடியாது.
ஆனால், எலான் மஸ்கால் இதைச் செய்ய முடியும். அதனால் தான் உன்னை (எலான் மஸ்க்) எனக்குப் பிடிக்கும்" என்று டிரம்ப் உரையாற்றினார்.
டிரம்ப் புகழ் மழையைப் பொழியும் அளவுக்கு எலான் மஸ்க் அவருக்காக என்ன செய்தார்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்து சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார் எலான் மஸ்க். இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி, 2022-ல் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதுதான்.
2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்பின் கருத்துகள் வன்முறையைத் தூண்டும்விதமாக இருந்ததாகக் கூறி, ட்விட்டர் நிறுவனத்தால் டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், இதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். முடக்கப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
அதிபர் தேர்தல் நெருங்கியவுடன் பாட்காஸ்ட், நேர்காணல், சமூக ஊடகப் பக்கங்கள் என அனைத்திலும் டிரம்ப் ஏன் அதிபராக வேண்டும் என்பதைத் தொடர்ச்சியான கருத்துகள் மூலம் வெளிப்படுத்தி வந்தார் எலான் மஸ்க். டிரம்பை மீண்டும் அதிபராக்குவதற்காக இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ. 1,000 கோடி வழங்கி உதவியிருக்கிறார் எலான் மஸ்க்.
டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கான பல காரணிகளில் எலான் மஸ்கின் ஆதரவு மிக முக்கியமானது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் அல்லது ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். இதற்கு இசைவு தெரிவித்தவர் எலான் மஸ்க். கோடிகளைக் கொட்டி ஆதரவு தெரிவித்தவர், வெற்றிக்குப் பிறகு சும்மா இருந்திருப்பாரா என்ன...? டிரம்புக்கு நிகராக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவுகளைக் குவித்துத் தள்ளி வருகிறார் எலான் மஸ்க்.