பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்து அளித்து, ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
டிரம்ப், அசிம் முனீர் கலந்துகொள்ளும் இந்த மதிய விருந்து வெள்ளை மாளிகையில் இருக்கும் அமைச்சரவை அறையில் நடைபெறும் என்றும், பத்திரிகையாளர்களுக்கு இதில் அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு, அதிபரின் தினசரி பொது அட்டவணையின்படி, பிற்பகல் 1 மணிக்கு (வாஷிங்டன் டி.சி. நேரப்படி) நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்த சுற்றுப்பயணத்தின்போது சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக கடந்த ஜூன் 15 அன்று வாஷிங்டன் டி.சி.க்கு வருகை தந்துள்ள முனீர், இந்த பயணத்தின்போது அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயண திட்டம் இரு தரப்பு உறவுகள் சார்ந்தது என்றும், ஜூன் 14-ல் நடைபெற்ற அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவுடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் டான் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அமெரிக்க இராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொள்வார் என்று வதந்திகள் பரவின. அப்போது இந்த வதந்திகளை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. `இது பொய்யான தகவல். எந்த வெளிநாட்டு இராணுவத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை’ என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.