கோப்புப்படம்  
உலகம்

அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இஸ்ரேல் & ஹமாஸ்: டிரம்ப் மகிழ்ச்சி | Israel | Hamas | Trump |

அமைதிக்கான வலுவான நீடித்த நிரந்தரமான முதல்படி என்று பதிவு....

கிழக்கு நியூஸ்

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்காவின் அமைதி உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக போர் நிலவி வருகிறது. இதனால் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக காஸாவில் பல பகுதிகள் முழுவதுமாக சேதமாகியுள்ளன. இந்தப் போரில் இதுவரை 63,800 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இதையடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கினார். சமீபத்தில் அவரைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேல் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

அடுத்தகட்டமாக ஹமாஸ் படையினரும் அமைதி உடன்படிக்கையின் சில பகுதிகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். அதன்படி, பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்கவும், காஸாவின் நிர்வாகத்தை அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன் உள்ல சுயாதீனமான பாலஸ்தீன அமைப்புக்கு ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, படைகளைத் திரும்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனாலும் ஆங்காங்கு தொடர் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், முதற்கட்ட அமைதி உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்து இட்டுவிட்டார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்துள்ளார். அவரது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இஸ்ரேலும் ஹமாஸும் முதற்கட்ட அமைதி உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுவிட்டன என்பதைப் பெருமையோடு அறிவிக்கிறேன். இதன்மூலம் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தங்கள் ராணுவத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும். இது, வலுவான, நீடித்த, நிரந்தாரமான அமைதிக்கான முதல்படி. அரபு மற்றும் இஸ்லாமிய உலகத்திற்கு இது ஒரு பெருமைக்குரிய நாள். இஸ்ரேல், அதைச் சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்கா ஆகியோர் சார்பில் மத்தியஸ்தர்களாகத் திகழ்ந்த கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, முன்னெப்போதும் நடக்காத நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் நன்றி. அமைதியைச் சாத்தியமாக்கியவர்கள் அருளப்பட்டவர்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி கூறியுள்ள நிலையில், பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி உடன்படிக்கையின் முதற்கட்டத்திற்குக் கிடைத்துள்ள ஒப்புதலை வரவேற்கிறோம். இது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமைப் பண்பின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது. பிணைக் கைதிகள் விடுக்கப்பட்டு, காஸா மக்களுக்கு நீடித்த அமைதிக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டு, மனிதநேய உதவிகள் வழங்கப்படும் என்று நம்புகிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.