இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்திருக்கும் நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். லட்சக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக 20 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கை டிரம்பால் முன்வைக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த அக்டோபர் 11 போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காகவும், விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளைச் சந்திப்பதற்காகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் வந்துள்ளார். முன்னதாக இஸ்ரேலுக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “காஸா அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு சேர்க்க அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தலைவர்களை ஒன்றிணைக்கவும் மத்திய கிழக்கிற்குப் பயணிக்கிறேன். இதனால் யூதர்கள், இஸ்லாமியர்கள், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார்.
இதற்கிடையில், இன்று உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் செஞ்சிலுவை அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். முதற்கட்டமாக 7 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 13 பேர் விடுவிக்கப்பட்டார்கள். விடுதலையான 20 பேரையும் அவர்களது உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிணைக் கைதிகள் 20 பேருக்கு பதிலாக 2000 பாலஸ்தீன பிணைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்பையும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர் வருகையை ஒட்டி டெல் அவிவின் கடற்கரையில் பிரமாண்டமான நன்றிப் பதாகையை வைத்து டிரம்பை வரவேற்றனர். அதிபர் டிரம்ப் தரையிறங்கும்போதே விமானத்தில் வரவேற்புச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. அதில், “இஸ்ரேலுக்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் வருகை எங்கள் மக்களின் ஆழமான நம்பிக்கையை அளிக்கிறது. தங்களது நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான அசைக்கமுடியாத உறவுக்காக எங்கள் நன்றி. கடவுள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் காக்கட்டும்” என்று வரவேற்புச் செய்தி ஒலிபரப்பட்டது. இதை வானில் இருந்தபடியே டிரம்ப்பின் தனி விமானம் ஏற்றுக்கொண்டது.