ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைக் கண்டிக்கும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கோரி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா மட்டும் எண்ணெய் வாங்கவில்லை என்பது இந்தியா தரப்பு நியாயமாக உள்ளது.
இந்நிலையில் தான் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை பேசும்போது, இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, "இந்தியா மற்றும்
சீனா எண்ணெய் வாங்குவது தான் ரஷ்ய போருக்கான பணத்தின் மூலதனம். பணத்தின் மூலதனத்தைத் தடுக்காவிட்டால், போரை நிறுத்த முடியாது" என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
வரும் வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளதை எதிர்நோக்கியிருப்பதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார். பிரதமர் மோடியை நல்ல நண்பர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, இதே செவ்வாயன்று இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாவது வேடிக்கையாக உள்ளது. வரி விதிப்பில் ஒருங்கிணைப்பு காண்பது குறித்து பேசுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு அமெரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Donald Trump | India US | European Union | Tariff | PM Modi |