அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இந்திய நிறுவனமான ரிலையன்ஸின் முதலீட்டுடன் உருவாக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தாக்குதல் 12 நாள்களை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு, இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளையும் ஈரான் தாக்கி வருகிறது. முக்கியமாக, உலகின் கச்சா எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய எண்ணெய் ஆலை
இதற்கிடையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்படவுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் பகுதியில் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரமாண்டமான புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்து ஆதரவு அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் மக்களின் வெற்றி
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:-
"அமெரிக்கா மீண்டும் உண்மையான எரிசக்தி ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது! டெக்சாஸின் பிரவுன்ஸ்வில் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை 'அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்' நிறுவனம் தொடங்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரியது. அமெரிக்கத் தொழிலாளர்கள், எரிசக்தி துறை மற்றும் தெற்கு டெக்சாஸின் சிறந்த மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இது.
ரிலையன்ஸுக்கு நன்றி
இந்த மகத்தான முதலீட்டிற்காக இந்திய பங்குதாரர்களுக்கும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கு முதன்மை என்கிற நமது கொள்கை, உரிமங்களை எளிதாக்கி, வரிகளைக் குறைத்ததன் மூலம் பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை நம் நாட்டிற்கு ஈர்த்துள்ளது. பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் அமையவுள்ள இந்தப் புதிய சுத்திகரிப்பு ஆலை, அமெரிக்கச் சந்தைகளுக்கு எரிபொருள் வழங்கும், நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும். குறிப்பாக பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும், இது உலகின் மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும். இது உலகளாவிய ஏற்றுமதிக்கு வலுசேர்க்கும்; அத்துடன் இந்த வளர்ச்சிக்குத் தகுதியான இப்பகுதிக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் கொண்டு வரும். இதுதான் அமெரிக்க எரிசக்தி ஆதிக்கம். எப்போதும் அமெரிக்காவிற்கே முதலிடம்!" என்று பதிவிட்டுள்ளார்.
President Donald Trump said the US will get its first new oil refinery in 50 years with the help of investment from India's Reliance Industries Ltd.