பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு அனுமதி: தாலிபன் அரசின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி 
உலகம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு அனுமதி: தாலிபன் அரசின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி | Afghanistan |

கணவரின் அனுமதி இன்றித் தனது உறவினர்களைப் பார்க்கச் செல்லும் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை...

கிழக்கு நியூஸ்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ‘சில நிபந்தனைகளுடன்’ சட்டப்பூர்வமாக்கி தாலிபன் அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் ஹிபதுல்லா அகுந்த்சாடா தலைமையிலான தாலிபன் அரசு பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது. 2021-ல் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதலே அந்நாட்டில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை

இதற்கிடையில், சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைச் சட்டப்பூர்வமாக்கும் 90 பக்கங்கள் கொண்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சில நிபந்தனைகளுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தண்டிக்க வன்முறையைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் என்ன?

ஆப்கானிஸ்தானில், கணவர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிக்க இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. எலும்பு முறிவு அல்லது வெளிப்படையான காயங்கள் ஏற்படாத வரை, இத்தகைய உடல் ரீதியான தாக்குதல்கள் குற்றமாகக் கருதப்படாது என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை எலும்பு முறிவோ காயங்களோ ஏற்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 15 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், அதனை த்தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள்

மேலும், இந்தப் புதிய சட்டத்தின்படி திருமணமான பெண், கணவரின் அனுமதியின்றித் தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2009-ல் முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சட்டம்’ முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் கணவர்களின் ‘சொத்து’ அல்லது ‘அடிமைகளாக’ நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு

இந்த சட்ட மசோதாவை ஆப்கானிஸ்தனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மனித உரிமை அமைப்பான ராவதாரி அமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. இச்சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் சட்டம் என்று சாடியுள்ள அவ்வமைப்பு, தாலிபன் நீதிமன்றங்களில் இச்சட்டம் செயல்படுத்தப்படுவதை உடனடியாக நிறூத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் ரீம் அல்சலேம் இது தொடர்பாக எக்ஸ் தளப் பதிவில் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"ஆப்கானிஸ்தானில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் விளைவுகள் மிகவும் பயங்கரமானவை. தாலிபான்களைத் தடுக்க யாரும் இல்லை என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். சர்வதேச அமைப்புகள் இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்களா? ஆம் எனில் எப்போது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Domestic violence now legal in Afghanistan as Taliban issue horror new laws. Domestic violence that does not result in 'broken bones or open wounds' is now legal in Afghanistan under the Taliban's new laws - while 'obscene' cases carry a maximum of just 15 days in prison.