உலகம்

விவாதத்தில் ஆடியோ காதணிகளை அணிந்திருந்தாரா கமலா ஹாரிஸ்?: உண்மை என்ன?

ராம் அப்பண்ணசாமி

இந்திய நேரப்படி கடந்த செப்.11 காலை 6.30 மணிக்கு, அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்புக்குச் சவால் அளிக்கும் விதமாகக் கமலா ஹாரிஸ் பேசினார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவாதத்தில், கமலா ஹாரிஸ் அணிந்திருந்த முத்துக் கம்மல்கள் பேசுபொருளாகியிருக்கிறது. கமலா ஹாரிஸ் அணிந்திருந்தவை வெறும் கம்மல்கள் அல்ல, அவை முத்துப் பதித்திருந்த ஹெட்ஃபோன்கள் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள ELECTION2024 என்ற பக்கத்தில், `கம்மலாகவும், ஹெட்ஃபோனாகவும் செயல்படும் 'நோவா ஹெச் 1 ஆடியோ இயர் ரிங்’ என்பதையே விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் அணிந்திருந்தார்’ என்று புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது. டிரம்புக்கு எதிரான வேட்பாளர் அனைத்து விவாத விதிகளையும் மீறுவார் என்பதை கமலா ஹாரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் தன் ஹெட்ஃபோன்கள் வழியாக மறுமுனையில் யாரோ பேசியதைக் கேட்டு, அதன்மூலம் டிரம்புக்கு எதிரான விவாதத்தில் கமலா ஹாரிஸ் பேசினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் முத்து கம்மல்களையும், முத்துப் பதித்த அணிகலன்களையும் கமலா ஹாரிஸ் அணிவதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது.

Alpha Kappa Alpha என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க மகளிர் அமைப்பில் கமலா ஹாரிஸ் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். முத்து அணிகலன்கள் அணிவது இந்த உறுப்பினர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இத்துடன் ஆப்பிள்-பச்சை, சால்மன்-பிங் நிறங்களும் இந்த அமைப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

எனவே இந்த நிறங்களினால் ஆன உடைகளையும், முத்து அணிகலன்களை உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கமலா ஹாரிஸ் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.