கோப்புப்படம் ANI
உலகம்

இந்தியா - பாக். போரை நிறுத்தியுள்ளேன், நோபல் பரிசு வேண்டும்: டிரம்ப் | Donald Trump |

"நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் எந்த வர்த்தகமும் செய்யப்போவதில்லை."

கிழக்கு நியூஸ்

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் உள்பட மொத்தம் 7 போர்களை நிறுத்தியதால், தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் சனிக்கிழமை பேசியதாவது:

"உலக அரங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மதிப்பைச் சம்பாதிக்கும் வகையிலான செயல்களைச் செய்து வருகிறோம். சமாதான ஒப்பந்தங்களை மேற்கொள்ளச் செய்கிறோம், போர்களை நிறுத்துகிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இந்தப் போரை நாங்கள் வர்த்தகத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தினோம். அவர்களுக்கு வர்த்தகம் செய்ய வேண்டும். இரு நாட்டு தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மேனியா மற்றும் அஜர்பைஜான், கோசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோபியா, ருவாண்டா மற்றும் காங்கோ. இந்த நாடுகளுக்கு இடையிலான போரைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். இவற்றில் 60 சதவீத போர்களை வர்த்தகம் மூலம் நிறுத்தியுள்ளோம்.

இந்தியாவிடம், 'நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் எந்த வர்த்தகமும் செய்யப்போவதில்லை. அவர்களிடத்தில் (பாகிஸ்தான்) அணு ஆயுதங்கள் உள்ளன' என்றேன். அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.

7 போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளேன். ஒவ்வொரு போருக்கும் தலா ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றேன். அதற்கு, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலானப் போரை நிறுத்துங்கள், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார்கள். நான் 7 போர்களை நிறுத்தியுள்ளோம். அந்த ஒரு போர், மிகப் பெரிய போர்" என்றார் டிரம்ப்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதி முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் தென்பட்டது. இரு நாடுகளும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டதால், போர்ப் பதற்றம் அதிகரித்தது. மே 10 அன்று சண்டையை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

மே 10 முதல் பல்வேறு தருணங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ச்சியாகக் கோரி வருகிறார். பாகிஸ்தானுடனான சண்டையில் மூன்றாவது தரப்பு தலையீடு எதுவும் இல்லை என இந்தியா தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறது.

Donald Trump | US President | Nobel Prize | India Pakistan | Operation Sindoor |