தாய்லாந்து, கம்போடியா இடையே தொடரும் பிரச்னை (கோப்புப்படம்) 
உலகம்

ஹிந்துக் கடவுள் சிலை அகற்றம்: தாய்லாந்து விளக்கம் | Thailand | Cambodia |

ஹிந்து மதம் உள்பட எல்லா மதங்களையும் சமமாக மதிப்பதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் ஹிந்துக் கடவுள் சிலை அகற்றப்பட்டது குறித்து தாய்லாந்து தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் சண்டை வெடித்தது. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னை எல்லைப் பிரச்னை தான். குறிப்பிடத்தக்க இடத்துக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் தான் பிரச்னையே. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்துவைக்க இரு நாடுகளும் சண்டையை நிறுத்த கடந்த ஜூலை மாதம் ஒப்புக்கொண்டன. ஆனால், கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் சண்டை ஆரம்பித்துவிட்டது.

டிசம்பர் 18 அன்று கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதலை நடத்தியது. கம்போடிய ராணுவம் ராக்கெட்டுகளை வைத்திருந்த கிடங்கு மீது தங்களுடைய ஜெட் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அண்மை நாள்களாக ராணுவச் சண்டை நடந்து வருகின்றன.

இதற்கிடையே தான் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஹிந்துக் கடவுள் சிலை ஒன்று அழித்து அகற்றப்பட்டது. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. உலகம் முழுக்க ஹிந்து மதத்தைப் பின்பற்றி வருபவர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அச்செயலைக் கண்டித்தது. மேலும், இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. தாய்லாந்து ஹிந்துக் கடவுள் சிலையை அகற்றியதைக் கம்போடியாவும் குற்றம்சாட்டியிருந்தது.

சிலை அழித்து அகற்றப்பட்டது குறித்து தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.

ஹிந்து மதம் உள்பட எல்லா மதங்களையும் சமமாக மதிப்பதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. சிலை இருந்த இடத்தைத் தாய்லாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, அப்பகுதியை நிர்வகிக்கவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சிலை அகற்றப்பட்டதாகத் தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலையை அகற்றியதில் மதம் மற்றும் நம்பிக்கைகளை ஈடுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதத் தலம் என்று குறிப்பிடுவதற்கான முறையான அங்கீகாரம் எதுவும் பெறப்படாமல் சிலை நிறுவப்பட்டிருப்பதாகவும் தாய்லாந்து தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Thailand | Cambodia | Thailand Cambodia | Hindu Statue |