உலகம்

வேலை, முதலீடு மோசடிகள்: கம்போடியாவில் 105 இந்தியர்கள் கைது! | ED | Cyber Fraud

ஐபி (IP) கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக கணினிகளுக்குப் பதிலாக ஐபோன்கள் பயன்படுத்தப்பட்டன.

ராம் அப்பண்ணசாமி

தாகசைபர் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஒரு சர்வதேச நடவடிக்கையில், பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கும் பல இந்தியர்களை உள்ளடக்கிய ஒரு கடத்தல் மற்றும் இணைய மோசடி கும்பல் கண்டறியப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக 105 இந்தியர்கள், 81 பாகிஸ்தானியர்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கம்போடியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எல்லை தாண்டிய டிஜிட்டல் குற்ற வலையமைப்பு தொடர்பான விரிவான விசாரணையை அமலாக்கத்துறை தலைமையிலான இந்திய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

பல சைபர் மோசடி வழக்குகள் தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும், குறிப்பாக கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் உள்ள மோசடி மையங்கள் வழியாகவே நடந்துள்ளன என்பதை அமலாக்கத்துறை ஆவணங்கள் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக, பெரும்பாலான இந்த சைபர் குற்றங்கள், சட்டவிரோத கடத்தலுக்குப் பிரபலமான மையமாக விளக்கும் `தங்க முக்கோணம்’ பகுதியுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

வேலைகளால் ஈர்க்கப்பட்டு, மோசடிகளில் சிக்கியவர்கள்

வெளிநாட்டில், குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் துபாயில் அதிக சம்பளம் தரும் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட இந்திய குடிமக்கள், இந்த சைபர் மோசடி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மணீஷ் தோமரிடம், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர் பாபி கட்டாரியா ஆசை காட்டியுள்ளார். ஆனால் இறுதியில் சீன அதிகாரிகளால் மணீஷின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதலீடு தொடர்பான மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்பட்டு தங்க முக்கோண பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மணீஷ் தோமர் கூறினார்.

`இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து கடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், சீன முதலாளிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுடன் கூடிய, ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்ட 20-30 கட்டடங்கள் அடங்கிய வளாகம் குறித்து அவர் விவரித்தார்’ என்று அமலாக்கத்துறையின் குறிப்பு கூறுகிறது.

பாதிக்கப்பட்ட மற்றொருவரான பால், வேலை நேர்காணலுக்காக துபாய்க்குச் செல்வதாக நினைத்தார். ஆனால் கம்போடியாவின் போய்ம் ஃபெட்டில் உள்ள ஒரு `டிஜிட்டல் கைது மோசடி’ மையத்தில் அவர் சிக்கினார்.

`முவே தாய் மொழியில் பயிற்சி பெற்ற காவலர்கள் துப்பாக்கிகளுடன் இருந்தனர். சிபிஐ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ய எனக்கு ஏழு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருப்பவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அச்சுறுத்துவதே எனது வேலை’ என்று பால் விவரித்தார்.

மேலும், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

குற்றச் செயல்முறையை விளக்கிய பால், `ஐபி (IP) கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக கணினிகளுக்குப் பதிலாக ஐபோன்கள் பயன்படுத்தப்பட்டன, தாய்லாந்திலிருந்து வாங்கப்பட்ட தொலைதொடர்பு லைன்களைப் பயன்படுத்தி, பிரியா (Bria) என்ற செயலி மூலம் இணைய வழியில் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றார்.

இந்திய வழக்குகள்

இத்தகைய மோசடிகளால் ஃபரிதாபாத், நொய்டா மற்றும் பதிண்டாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்கள் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளன.

ஃபரிதாபாத்தில், ஐசிஐசிஐ குழுக்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட போலி செயலியில் முதலீடு செய்த ஒரு பெண் ரூ. 7.59 கோடி இழந்துள்ளார். இதேபோல், நொய்டாவில் ஒரு தொழிலதிபர் ரூ. 9.09 கோடியையும், பதிண்டாவில் ஒரு மருத்துவர் ரூ. 5.93 கோடியையும் இழந்துள்ளனர்.

இத்தகைய மோசடி நிகழ்வுகளில், அதிக வருமானம் ஈட்டும் விளம்பரங்களுடன் கூடிய போலி வாட்ஸ்அப் குழுக்களில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்யவும், மோசடி குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளுக்கு பணத்தை மாற்றவும் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.

அடுத்தது என்ன?

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக்கொண்டு, இந்த மோசடி நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது.