ANI
உலகம்

இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: வாங் யி பாகிஸ்தான் பயணத்தால் இந்தியா கவலை! | China

இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் முக்கியமான அண்டை நாடுகள் என்பதால், இரு நாடுகளுடனும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்க சீனா தயாராக உள்ளது.

ராம் அப்பண்ணசாமி

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான சந்திப்பின்போது, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்தது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு முனைகளில் இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகள் சரியான திசையில் நகர்ந்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார். இருப்பினும், பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கமான உறவு இந்தியாவிற்கு கவலையளிப்பதாக உள்ளது.

அஜித் தோவல், ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் தலைநகர் தில்லியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிறகு, ஆகஸ்ட் 21 அன்று இஸ்லாமாபாத்தில் வைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரை சந்தித்து வாங் யி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

பாகிஸ்தான் அரசால் இன்று (ஆக. 19) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

`துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான, செனட்டர் முகமது இஷாக் தாரின் அழைப்பின்பேரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான, வாங் யி 2025 ஆகஸ்ட் 21 அன்று 6-வது பாகிஸ்தான்-சீன வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை தாங்க இஸ்லாமாபாத்திற்கு வருகை தருகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை ஆபரேஷன் சிந்தூரில் சீனாவிற்கு உள்ள பங்களிப்பை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவ சொத்துக்கள் குறித்த முக்கியமான உளவுத்துறை தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களில் 81% சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், சீனா பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதில் சீனாவின் பங்கு குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் கேள்வி எழுப்பியபோது, `கொள்கை அடிப்படையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் முக்கியமான அண்டை நாடுகள் என்பதால், இரு நாடுகளுடனும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்க சீனா தயாராக உள்ளது’ என்றார்.