இந்தியா முக்கிய உறுப்பினராக இருக்கும் சார்க் (SAARC) அமைப்புக்கு மாற்றாக, பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து பிராந்திய அளவிலான ஒரு புதிய அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவதற்காக கடந்த ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியும் பங்கேற்றதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
`ஜூன் 19 அன்று குன்மிங்கில் நடந்த கூட்டத்தில், சார்க்கின் ஒரு பகுதியாக இருந்த பிற தெற்காசிய நாடுகளை, புதிய குழுவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது’ என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த புதிய அமைப்பில் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) கடந்த டிசம்பர் 8, 1985 அன்று உருவாக்கப்பட்டது. அப்போது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகிய 7 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்தன. கடந்த 2007-ல் இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் இணைந்தது.
கடைசியாக கடந்த 2014-ல் சார்க் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த ஆண்டு பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட உரி பயங்கரவாதத் தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து நவம்பரில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19-வது சார்க் உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்தது.
பயங்கரவாதம் மற்றும் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்த கவலைகளை காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் உச்சி மாநாட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தன. இதனால் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு சார்க் அமைப்பு செயல்படவில்லை.