போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் REUTERS
உலகம்

அமெரிக்காவுடன் சமரசம்: போயிங் இறக்குமதிக்கான தடை நீக்கிய சீனா!

நடப்பாண்டில், ஏறத்தாழ 50 விமானங்களை சீன விமான நிறுவனங்களுக்கு போயிங் வழங்கவிருக்கிறது.

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஓரிரு மாதங்களாக நடைபெற்று வந்த வர்த்தகப் போரில் அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போயிங் விமானங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து, சீன அரசு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 90 நாள்கள் காலத்திற்கு பெரும்பாலான சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது, அதேநேரம் அமெரிக்க பொருள்கள் மீதான சீனாவின் வரிகள் 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட தகவல் சீன அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் தலையீடு இல்லாமல் இறக்குமதிகளை மேற்கொள்ள சீன விமான நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

விமானங்களில் பாதுகாப்பு கோளாறுகள், உற்பத்தி பாதிப்பு, வர்த்தக மோதல்களால் விற்பனை சரிவு போன்ற பல்வேறு சிக்கல்களால் போராடிவந்த போயிங் நிறுவனத்திற்கு சீன அரசின் இந்த முடிவு ஆசுவாசத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில், ஏறத்தாழ 50 விமானங்களை, சீன விமான நிறுவனங்களுக்கு போயிங் வழங்கவிருக்கிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய விமானத் தேவையில் ஏறத்தாழ 20 சதவீதம் சீனாவில் இருந்து எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போயிங் மற்றும் அதன் ஐரோப்பிய போட்டியாளரான ஏர்பஸ் என இரண்டு நிறுவனங்களுக்குமான ஒரு முக்கியமான சந்தையாக சீனா திகழும்.