புதிய அணை கட்டப்படவுள்ள பகுதி https://x.com/AFP
உலகம்

பிரம்மபுத்திரா நதி மீது பிரம்மாண்ட அணையின் கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா! | China | Dam | Tibet

உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகக் கருதப்படும் இந்த அணை குறித்து இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கவலை எழுந்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு அருகில் உள்ள திபெத் பகுதியில் வைத்து பிரம்மபுத்திரா நதி மீது, 167.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஒரு பிரம்மாண்ட அணையுடன் கூடிய நீர்மின் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை சீனா நேற்று (ஜூலை 19) தொடங்கியது.

யார்லுங் சாங்போ என்று பிரம்மபுத்திரா நதி சீனாவில் அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியின் நியிஞ்சி நகரில் வைத்து, இந்த நதிக்கரையில் நடைபெற்ற அணையின் அடிக்கல் நாட்டு விழாவில் சீனப் பிரதமர் லி குயாங் கலந்துகொண்டார்.

கடந்தாண்டு டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி கட்டப்படவுள்ள மிகப்பெரிய நீர்மின் வளாகத்தில் ஐந்து அடுக்கு மின் நிலையங்கள் அமைகின்றன. இந்த திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 1.2 டிரில்லியன் யுவான் (தோராயமாக 167.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டுமான செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீர்மின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும், ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரம் இங்கே உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் வழங்க இதுவே போதுமானது என்று கூறப்படுகிறது.

திபெத்தில் அமைந்துள்ள இமயமலைப் பகுதியின் ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கில் இந்த நீர்மின் நிலையம் கட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து, யு-வடிவத்தில் வளைந்து முதலில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் நுழையும் பிரம்மபுத்திரா நதி அதன்பிறகு வங்கதேச நாட்டிற்கு நுழைந்து பின்னர் கடலில் கலக்கிறது.

அணை கட்டப்படும் இடம் இந்தியா-சீனா எல்லைக்கு அருகாமையில் இருப்பதாலும், நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற இரு நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதாலும், சீனாவின் இந்த பெருமுயற்சி இந்தியாவில் கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்த புதிய அணையால் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் வங்கதேசத்தில் இந்த அணை குறித்த கவலை எழுந்துள்ளது.