உலகம்

டிரம்ப் நண்பர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! | Charlie Kirk |

சார்லியின் மறைவையடுத்து, அமெரிக்கா முழுக்க தேசியக் கொடியை அரைக் கம்பதத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நண்பர் சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

உடா வாலே பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் கலந்துரையாடத் தொடங்கி 20 நிமிடங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் தேடப்பட்டு வருவதாகப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வலதுசாரி சிந்தனையுடைய கருத்துகளைப் பேசுவதில் புகழ்பெற்றவர் சார்லி கிர்க். அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் சார்லி கிர்குக்குப் பெரும் ஆதரவு உண்டு. ஊடகங்களில் பேசுவதன் மூலம் இவர் பிரபலமாக அறியப்படுகிறார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக இவர் வாக்கு சேகரித்தார். மகத்தான அமெரிக்காவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற டிரம்ப் இயக்கத்தின் பெரும் ஆதரவாளர் கிர்க். இந்த இயக்கத்தின் முகமாகவே பார்க்கப்படும் அளவுக்கு இதை மக்களிடத்தில் பெரிதளவில் கொண்டு சேர்த்தவர்.

சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியுள்ளது. சார்லி கிர்க் உயிரிழந்ததை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார்.

"மகத்தான, ஜாம்பவான் சார்லி கிர்க் உயிரிழந்துள்ளார். சார்லியை விட அமெரிக்க இளைஞர்களைப் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை. அனைவரும் விரும்பியவராக இருந்தவர் சார்லி கிர்க். அவர் நம்முடன் இல்லை. அவருடைய மனைவி எரிகா மற்றும் குடும்பத்தினருக்கு நானும் மெலானியாவும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

மேலும், "கொடூரச் சம்பவம் மற்றும் மற்ற அரசியல் வன்முறைகளுக்குக் காரணமான அனைவரையும் எனது தலைமையிலான நிர்வாகம் தேடிப் பிடிக்கும்" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சார்லியின் மறைவையடுத்து, அமெரிக்கா முழுக்க தேசியக் கொடியை அரைக் கம்பதத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எஃப்பிஐ இயக்குநர் கஷ் படேல் கூறுகையில், "சந்தேகத்தின் பெயரில் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

Charlie Kirk | Donald Trump |