கனடாவில் உயர்க் கல்விக்கு விண்ணப்பித்த 74% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள், அந்நாட்டு அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் கனடாவும் முக்கிய இடமாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு படிப்புக்காகவும் வேலைக்காகவும் செல்கின்றனர். குறிப்பாக கடந்த 2024-ல் மட்டும் 1.88 லட்சம் பேர் கனடாவுக்குப் படிக்கச் சென்றுள்ளனர். இது, அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2% அதிகம். கனடா பல்கலைக்கழகங்களில் உள்ள உலகத்தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை காரணமாக மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது ஆகியவை மிகப்பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. இதனால், உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது. இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி நடவடிக்கையாக மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
கடந்த 2023-ல் இந்திய மாணவர்களின் விசா 32% நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 74% விசா விண்ணப்பங்களை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீன மாணவர்களின் விசா விண்ணப்பங்களிலும் 20%-ஐ கனடா அரசு நிராகரித்துள்ளது.
அதேபோல், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2023-ல் 20,900 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் ஆகஸ்ட்டில் 4,515 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவு இருந்தபோதிலும், 1,000-க்கும் மேற்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களைக் கொண்ட அனைத்து நாடுகளிலும் இந்தியாவே அதிக நிராகரிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையில் நிலவும் அரசாங்கப் பதற்றங்களின் பின்னணியில் விசா நிராகரிப்பு அதிகரித்துள்ளது. மேலும், 2023-ல் 1,550 க்கும் மேற்பட்ட போலி படிப்பு அனுமதி விண்ணப்பங்களைக் கண்டறிந்த பிறகு, கனடாவின் குடியேற்றத் துறை மோசடி கண்டறியும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு, மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு அமைப்புகள் உலகளவில் 14,000 க்கும் மேற்பட்ட மோசடியான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் விசா நிராகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Canada's study permit crackdown disproportionately impacts Indian applicants with refusal rates soaring to 74% in August 2025. This surge, driven by fraud concerns and stricter verification, has halved Indian applications.