ANI
உலகம்

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து, 2015-ல் ஆட்சியைப் பிடித்தார் ட்ரூடோ.

ராம் அப்பண்ணசாமி

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

5 முறை கனடா பிரதமராகப் பதவி வகித்த பெர்ரி ட்ரூடோவின் மூத்த மகனாகக் கடந்த 1971-ல் பிறந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. தந்தையின் வழியைப் பின்பற்றி கனடா லிபரல் கட்சியில் இணைந்த ட்ரூடோ, தந்தையின் மரணத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

லிபரல் கட்சி சார்பில் 2008 நாடாளுமன்ற கீழ் அவைத் தேர்தலில் வெற்றிபெற்று, முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் ட்ரூடோ. இதைத் தொடர்ந்து கட்சியில் படிப்படியாக முன்னேறி, கடந்த 2013-ல் கனடா லிபரல் கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து மூன்று முறை கனடா பிரதமர் பதவியை வகித்து வந்த ஸ்டீஃபன் ஹார்பர் தலைமையிலான கனடா கன்சர்வேடிவ் கட்சியை 2015 நாடாளுமன்ற கீழ் அவைத் தேர்தலில் தோற்கடித்து, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் ட்ரூடோ.

இதனைத் தொடர்ந்து 2019 பொதுத்தேர்தலிலும், அதன்பிறகு 2022 பொதுத்தேர்தலிலும் லிபரல் கட்சியை வழிநடத்தி, அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார் ட்ரூடோ.

இந்நிலையில், மூன்றாவது முறையாகப் பிரதமரான பிறகு, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், கனடாவுக்குமான ராஜ்ஜியரீதியிலான உறவுகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும், கடந்த செப்டம்பர் 2024-ல் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டார் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்.

அதன்பிறகு, ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் இருந்து துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ட்ரூடோவுக்கு லிபரல் கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது.

அத்துடன் தீவிரமான எல்லைக் கட்டுப்பாட்டுகளை பின்பற்றாவிட்டால், கனடாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்.

மேலும் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணம் என அவ்வப்போது கிண்டலாகக் கூறிவந்தார் டிரம்ப். இந்நிலையில், லிபரல் கட்சித் தலைவர் பதவியையும், கனடா பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக இன்று (ஜன.6) அறிவித்துள்ளார் ட்ரூடோ.