கமலா ஹாரிஸ் 
உலகம்

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: ஒபாமா

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்கள்.

இந்தத் தேர்தலில் அதிபர் ஜோ பைடனுக்கான செல்வாக்கு குறைவாக இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு டிரம்புக்கே அதிகம் இருப்பதாகவும் விமர்சனங்கள், பேச்சுகள் எழுந்தன. அதிபர் தேர்தலுக்கானப் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவது தொடர்பாக ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் வரத் தொடங்கின. டிரம்புடன் நடைபெற்ற விவாதத்தில் தடுமாறியது, டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டது என சூழல்கள் அனைத்தும் பைடனுக்கு எதிராக மாறியது.

இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் கடந்த 21 அன்று அறிவித்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் இவருடைய மனைவி மிஷெல் ஒபாமா, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிஷெல் ஒபாமா தங்களுடைய ஆதரவை தொலைபேசி வாயிலாக கமலா ஹாரிஸிடம் தெரிவித்துள்ளார்கள். இருவருக்கும் கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்தார்.