இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்புமாறு அந்நாட்டின் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, `தி டெய்லி ஸ்டார்’ செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ள வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹொசெய்ன், `நீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் வகையில் அவரை (ஷேக் ஹசீனா) வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு இந்திய அரசிடம் வாய்மொழிக் குறிப்பு அனுப்பியுள்ளோம்’ என்றார்.
வங்கதேச அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ல் தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ விமானத்தில் தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஷேக் ஹசீனா. ஆனால் இந்தியாவில் அவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த மாதம் இது தொடர்பாக பேட்டியளித்த வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முஹமது யூனுஸ், `இந்தியாவுடன் முன்பு வங்கதேச அரசால் மேற்கொள்ளப்பட்ட (குற்றவாளிகள்) ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஷேக் ஹசீனா திரும்ப அழைத்துவரப்படுவார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது நடைபெற்ற கொலைகளுக்காக அவர் மீது தொடர்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும்’ என்றார்.
42 கொலை வழக்குகள் உள்ளிட்ட 51 வழக்குகள் ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் தொடரப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக டாக்கா ட்ரிப்யூனுக்குப் பேட்டியளித்துள்ள வங்கதேச அரசின் உள்துறை அமைச்சகத்திற்கான ஆலோசகர் ஜஹாங்கிர் ஆலம் சௌதுரி, `இந்தியாவுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளது. அதன் கீழ் அவரை (ஹசீனாவை) வங்கதேசத்திற்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.