உலகம்

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் ஷஹாபுதீன்

மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்க முகமது யூனுஸ் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு நியூஸ்

வங்கதேச நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்துள்ளார்.

அதிபர் ஷஹாபுதீனின் ஊடகப் பிரிவு செயலர் ஷிப்லு ஸமான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்ததையடுத்து, திங்கள்கிழமை மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் போராட்டத்தில் வலுப்பெற்றது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நேற்று அங்கிருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டதாகவும், விரைவில் இடைக்கால அரசை அமைக்கப்படவுள்ளதாகவும் ராணுவத் தளபதி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

இந்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தை அந்த நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவை விடுதலை செய்வதாகவும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டும் என மாணவர்கள் போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக யூனுஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.