வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதாகவும், பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி வக்கீர் உஸ்-ஸமான் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இட ஒதுக்கீட்டை முன்வைத்துக் கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியது. இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் வங்கதேச மக்களிடம் உரையாற்றினார் அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கீர் உஸ்-ஸமான்.
`பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அமைதிப்பாதைக்குப் பொதுமக்கள் திரும்ப வேண்டும். வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு அமைய ராணுவம் உதவி செய்யும். இடைக்கால அரசை ராணுவம் தொடர்ந்து கண்காணிக்கும். கடந்த சில வாரங்களாக நாட்டில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்று பொதுமக்களிடம் உரையாற்றினார் தளபதி வக்கீர் உஸ்-ஸமான்.
இன்று (ஆகஸ்ட் 5) மதியம் 2.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனாவும், அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளியேறியுள்ளனர். 76 வயதான ஷேக் ஹசீனா 2009 முதல் அந்நாட்டுப் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தப்பிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன. அதே நேரம் வங்கதேச தலைநகர் டாக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் பரவி வரும் வன்முறை காரணமாக இந்திய வங்கதேச எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளன.