உலகம்

அமெரிக்க பாலம் விபத்து: இரு உடல்கள் மீட்பு

விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளவர்களில் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வாஷிங்டனில் உள்ள மெக்ஸிகோ தூதரகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ நதி மீது சுமார் இரண்டரை கி.மீ. தூரத்துக்கு பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் அமைந்திருந்தது. உள்ளூர் நேரப்படி மார்ச் 26 அதிகாலையில் இலங்கைக்குச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதில் பாலம் சரிந்து விழுந்தது.

வாகனப் போக்குவரத்துக்குப் பாலம் பயன்பாட்டில் இருந்ததால், நிறைய பேர் விபத்தில் சிக்கியிருக்கலாம், நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது. விபத்துக்குக் காரணமான கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்தவுடன், உடனடியாக மேரிலாந்து போக்குவரத்துத் துறையைத் தொடர்புகொண்டு எச்சரித்ததாகவும், எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதிகாரிகள் பாலத்தில் வாகனங்கள் செல்வதைத் தடுக்க போக்குவரத்தை நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிபர் பைன் புதன்கிழமை தெரிவித்தார். இந்த எச்சரிக்கையே பெரும் உயிர் சேதத்தைத் தவிர்த்ததாக பைடன் குறிப்பிட்டார்.

பாலத்தில் சாலைகளில் இருந்த பள்ளத்தைப் பழுது பார்ப்பதற்கான பணிகளில் இருந்த கட்டுமானப் பணியாளர்கள் மட்டுமே விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்பட்டன. விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளவர்களில் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வாஷிங்டனில் உள்ள மெக்ஸிகோ தூதரகம் நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில், படாப்ஸ்கோ நதியிலிருந்து விபத்து இடிபாடுகளுக்கு மத்தியில் டிரக்கிலிருந்து இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேரிலாந்து மாநில காவல் துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.