நேபாளத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. குறிப்பாக ஜென் ஸி எனப்படும் இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகம், அமைச்சர்களின் வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டு வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரசுக்கு எதிராக எழுந்த போராட்டத்தின் விளைவாக நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நேபாள அதிபர் ராமசந்திர பௌடெலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது.
நேபாளத்தில் பொதுத்தேர்தல்
நேபாளத்தின் இடைக்காலத் தலைவராக நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று வரலாறு படைத்த சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால பிரதமராகச் செயல்பட்டு வந்த நிலையில், புதிய அரசைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் 5 அன்று நடைபெற்றது. நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 110 உறுப்பினர்கள் விகிதாசார முறை மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நேபாளத்தில் 1.89 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாரம்பரிய கட்சிகளுக்குப் பின்னடைவு
நேபாள தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்று, 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்று, 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களைப் பிடித்து, 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஷ்ரம் சம்ஸ்கிருதி கட்சி முன்பு 6 இடங்களில் முன்னிலை வகித்திருந்த நிலையில், தற்போது 3 இடங்களாகக் குறைந்துள்ளது.
யார் இந்த பாலேந்திர ஷா?
மறுபுறம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஆர்எஸ்பி கட்சி, மொத்தம் உள்ள 165 தொகுதிகளில் சுமார் 99 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 18 தொகுதிகளில் ஆர்எஸ்பி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நேபாளத்தின் புதிய பிரதமராக ஆர் எஸ்பி கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பதவியேற்பார் என்று தெரிகிறது. 35 வயதான பாலேந்திர ஷா, ஆர்எஸ்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறியப்படுகிறார். அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்பார். அவர் ராப் இசைக்கலைஞர். தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பாலேன்’ என நேபாள மக்களிடையே அறியப்படுகிறார். ஜென் ஸி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்ற தலைவராகத் திகழ்கிறார்.
Balendra Shah-led RSP maintains wide margin as it heads for landslide victory in Nepal's parliamentary elections