ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள முக்கிய மருத்துவமனை சேதமடைந்ததை அடுத்து, இனியும் காமேனியை உயிருடன் விட்டு வைத்திருக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடங்கிய மோதல், தொடர்ந்து 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 40-க்கும் பேர் காயமடைந்துள்ளனர். அதேநேரம் இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தெற்கு இஸ்ரேலில் இருக்கும் இந்த மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மருத்துவமனையின் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளி தற்போது மிக வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்,
`ஈரான் போன்ற நாட்டிற்குத் தலைமை தாங்கியிருக்கும் காமேனி போன்ற சர்வாதிகாரி, இஸ்ரேலை அழிப்பதே நோக்கமாக கொண்டிருந்தால், அந்த நபர் இருக்கவே கூடாது. இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதன் இலக்குகள் பூர்த்தியடைய வேண்டுமென்றால், இந்த நபர் உயிருடன் இருக்கவேகூடாது’ என்றார்.
`யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அரேபிய பெடோயின்கள் சிகிச்சை பெற்று வந்த பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது கண்மூடித்தனமாக வகையில் ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. எங்கள் மக்களைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்று தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனை கட்டடத்தின் படத்துடன், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.