உலகம்

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: வலதுசாரிகளின் கை ஓங்குகிறதா?

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில், ஃபிரான்ஸ் நாட்டின் வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக்கு அதிக இடங்கள் கிடைத்தது

ராம் அப்பண்ணசாமி

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கான முதல் கட்டத் தேர்தல் கடந்த ஜூன் 30-ல் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை-7) இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில், ஃபிரான்ஸ் நாட்டின் வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. இதை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைத்து உத்தரவிட்டார் ஃபிரான்ஸ் அதிபர் மாக்ரோன். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூன் 30-ல் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் வலதுசாரி தேசிய பேரணி தலைமையிலான கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன. இடதுசாரிக் கூட்டணியான `புதிய பிரபலமான முன்னணிக்கு’ 27 சதவீத வாக்குகளும், மாக்ரோனின் மையவாத கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

மேலும் 2022 தேர்தலை ஒப்பிடும்போது இன்று நடைபெற்று வரும் இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மாக்ரோனின் மையவாத கூட்டணியை விட தேசிய பேரணி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வெவ்வேறு சிந்தாந்தங்களைக் கொண்டிருக்கும் மூன்று கூட்டணிகள் தேர்தல் களத்தில் இருப்பதால், தேர்தலுக்கு முன்பு வெளியான சில கருத்துக்கணிப்புகளின்படி தேசிய பேரணி தலைமையிலான வலதுசாரிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி நடக்கும் வேளையில் இடதுசாரிகளும், மையவாதிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம்.

ஒரு வேளை கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி வலதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் தேசிய பேரணி கட்சித் தலைவரான 28 வயதான ஜோர்டன் பார்டெல்லா ஃபிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராவார்.